திங்கள், 26 ஜூலை, 2010

india

நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட பிரசினைகளை தீர்க்கப்போவதாகக்கூறி இன்றைய பிரதமரும், அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் ஆகிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப் பட்டன.

நாடாளுமன்றம் – சட்ட மன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் வருடக்கணக்கில் விவாதம் (மட்டுமே) நடத்திவரும் நமது அரசியல்வாதிகள், நாடாளுமன்றத்திலோ, வேறு எந்த அவையிலோ எந்த விதமான விவாதமும் நடத்தாமல் உலக வர்த்த கழகத்தில் இந்தியாவை உறுப்பு நாடாக பதிவு செய்தனர். உண்மையில் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் எம்.பி.க்களுக்கே தெரியாமல், அதிகாரிகளே இதற்கான (டங்கல்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்கான அனுமதியை அளித்தவர் அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்.

இந்த கொள்கைகளுக்கு அன்று எதிர்ப்புகளும் இருந்தன. ஆனாலும் இதிலிருந்து விலகினால் பொருளாதார ரீதியாக பேரழிவுகள் ஏற்படும் என்றும், நாட்கள் செல்லச்செல்ல இந்த புதிய பொருளாதார கொள்கைகள் நல்ல பலன்களை கொடுக்கும் என்றும் மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாக்கள் சமாதானம் கூறினர்.

இதையடுத்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் பொருளாதார சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. வர்த்தகம் சார்ந்த ஏற்றுமதி-இறக்குமதி, வரிச்சட்டங்கள், வங்கிச்சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன. அறிவுச்சொத்துரிமை சட்டங்களில் உள்ள மக்கள் சார்பு அம்சங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவான அம்சங்கள் அமல்படுத்தப்பட்டன.

இவை இந்தியர்களின் விவசாயம், தொழில், மருத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவம் என்பது சேவை என்ற நிலை மாறி தொழிலாக ஆக்கப்பட்டுள்ளது. எந்தத் தொழிலும் கொள்ளை லாபம் ஈட்டுவதையே இலக்காக கொண்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் ஆக்கிரமித்ததால் இந்தியர்களின் நல்வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையை புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்க்கலாம்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம், ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் என்ற மருந்தை கிளிவெக் (GLIVEC, GLEEVEC) என்ற வணிகப்பெயரில் தயாரித்து வருகிறது.

இம்மருந்தை தயாரித்து விற்பனை செய்வதற்கான பிரத்யேக சந்தை உரிமை (EXCLUSIVE MARKETING RIGHT)யை காப்புரிமை சட்டம் மூலம் இந்த நிறுவனம் கடந்த 2003-ம் ஆண்டு பெற்றது. ஆனால் இம்மருந்தை வேறு செய்முறைகளில், வேறு பெயர்களில் சில நிறுவனங்கள் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தன.

இதை தடை செய்யக்கோரி சென்னை மற்றும் மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களில் நோவார்டிஸ் வழக்கு தொடர்ந்தது. அன்று வழக்கறிஞராக பணியாற்றிய மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அந்த நிறுவனம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நோவார்டிஸ் நிறுவனத்தை தவிர வேறு யாரும் அந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் இதே வழக்கை வேறு கோணத்தில் பார்த்தது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பதை தடை செய்யும் பிரத்யேக சந்தை உரிமை, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானது என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த இரு தீர்ப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், பிரத்யேக சந்தை உரிமைக்கு அடுத்த கட்டமான காப்புரிமையை இந்த மருந்துக்கு வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம், சென்னையிலுள்ள காப்புரிமை கட்டுபாட்டாளரிடம் மனு செய்தது. ஆனால் இந்தியாவிலுள்ள காப்புரிமை சட்டவிதிகளின்படி இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்க முடியாது என்று கூறி இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து நோவார்டிஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்த மேல் முறையீட்டில் அந்த நிறுவனம் வெற்றி பெற்றால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். தற்போதைய நிலையில் பல நிறுவனங்கள் ரத்தப்புற்று நோய்க்கான இமாடினிப் மெஸிலேட் மருந்தை தயாரித்து விற்பனை செய்வதால் இம்மருந்து சுமார் 50 ரூபாய் விலையில கிடைக்கிறது. ஒரு நோயாளி ஒரு நாளைக்கு நான்கு மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

நோவார்டிஸ் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டுவிட்டால் மற்ற நிறுவனங்கள் அம்மருந்தை தயாரிக்க முடியாது. அனைத்து ரத்தப்புற்று நோயாளிகளும் மருந்திற்கு அந்த நிறுவனத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். காப்புரிமை பெற்ற மற்ற நாடுகளில் நோவார்டிஸ் நிறுவனம் அம்மருந்திற்கு இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதே விலைக்கு மருந்து வாங்க ஒரு நோயாளிக்கு மாதம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இது எத்தனை இந்தியர்களுக்கு சாத்தியம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நோவார்டிஸ் நிறுவனத்தின் இமாடினிப் மெஸிலேட் மருந்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அதை பின்பற்றி காப்புரிமை கேட்பதற்கு ஏற்கனவே சுமார் 9,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே மருத்துவம் என்பதே இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும்.

எனவே இந்த வழக்கை நோவார்டிஸ் நிறுவனம் திரும்பப்பெறவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உட்பட உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்திய மக்களைப்பற்றி இந்திய அரசுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்குமே அக்கறை இல்லாதபோது, கொள்ளை லாபமே இலக்காகக் கொண்ட நோவார்டிஸ் நிறுவனம் வழக்கை திரும்ப பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.

---
மேற்கண்ட செய்திகள் அரசின் கொள்கைகளை மட்டுமே நமக்கு உணர்த்தவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்ற சில நபர்களின் தன்மைகளையும் உணர்த்துகிறது.
காப்புரிமை சட்டத்தில் ஒரு பொருள் தயாரிக்கும் முறைக்கு மட்டுமே சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டது. பின்னர் வர்த்தகம் சார்ந்த அறிவுச்சொத்துரிமைக்கான ஒப்பந்தத்தில் (Trade Related Intellectual Property RightS Agreement) இந்தியா கையொப்பம் இட்டதை தொடர்ந்து பொருள் செய்யும் முறைக்கு மட்டும் அல்லாமல் மருந்துப் பொருளுக்கே காப்புரிமை வழங்கும் முறை அமலுக்கு வந்தது.
இதன்படிதான் நோவார்டிஸ் நிறுவனம் ரத்தப்புற்று நோய்க்கான மருந்துக்கு காப்புரிமை கோருகிறது. இதற்காக நம் நாட்டின் காப்புரிமை சட்டம் – 1970 ல் திருத்தம் செய்து ஒரு அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அது கொண்டு வரப்பட்ட நாள்: 2004 டிசம்பர் 26! ஆம். சுனாமி பேரலை தாக்கி உலகின் பல பகுதிகளும் சோகத்தில் மூழ்கியிருந்தது.





இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்ய உலகின் பல நாடுகள் முன்வந்தன. அந்த நாளில்தான் அன்றைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், மற்ற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு மக்கள் விரோதமான/ பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான அந்த அவசர சட்டத்தில் யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி கையெழுத்திட்டார். அவரைத்தான் நமது நகைச்சுவை நடிகர்கள் முதல் நாடோடிகள்வரை வானளாவ புகழ்ந்து வருகின்றனர்.
---
அடுத்து இந்த விவகாரத்தில் மிக முக்கிய நபர் டாக்டர் மஷேல்கர் என்பவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆசிபெற்ற இவர் வேதித்துறை பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் பிறந்த உயர் குலம் காரணமாக இந்திய அரசிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் மிக முக்கிய பதவிகளை வகித்தவர்.
காப்புரிமை சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் (காலம்கடந்து) நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து, அறிவாளிகளின் குலத்தில் பிறந்த டாக்டர் மஷேல்கர் தலைமையில் வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக இருந்தது என்பதை சொல்லத் தேவையில்லை. எனவே இந்த அறிக்கையின்படி தமது மருந்துகளுக்கு காப்புரிமை வழங்கவேண்டும் என்று நோவார்டிஸ் நிறுவனம் வாதாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள இன்டலக்சுவல் பிராபர்டி இன்ஸ்டிடியூட்-ல் டாக்டர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஷாம்நாத் பஷீர் என்ற மாணவரின் கட்டுரையை திருடி அதனையே அறிக்கையாக தயாரித்து டாக்டர் மஷேல்கர் அளித்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. டாக்டர் பட்ட ஆய்வு மாணவர் ஷாம்நாத் பஷீர், நோவார்டிஸ் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த கட்டுரையை எழுதியதாகவும், அதை டாக்டர் மஷேல்கர் வார்த்தைக்கு வார்த்தை திருடி விட்டதாகவும் கூறியுள்ளார். மாணவரின் அறிவைத்திருடி பன்னாட்டு நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையை பாதுகாக்க டாக்டர் மஷேல்கர் மேற்கொண்ட முயற்சி அம்பலமானதை தொடர்ந்து அந்த “வல்லுனர்(!) குழு அறிக்கை” திரும்ப பெறப்பட்டது.
மாணவரின் அறிவுச்சொத்தை “வல்லுனர் மஷேல்கர்” திருடியது உலக அரங்கில் அம்பலமானாலும், அவருக்கு தண்டனையோ கண்டனமோ கிடையாது. அவாளுக்கெல்லாம் தண்டனை கொடுக்க கருட புராணத்திற்கு அதிகாரம் கிடையாது. மனுதர்மம்தான்!


---

இந்த விவகாரத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவும் செய்யுமா? என்று எதிர்பார்ப்பவர்கள், இதுபோன்ற விவகாரங்களை இந்தியாவிற்கு கொண்டுவந்தவர்களே உலக வங்கியின் ஏஜென்டுகளான மன்மோகன் சிங், சிதம்பரம் வகையறாதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமானால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த விவகாரத்தில் ஏதும் செய்யமுடியுமா? என்று வேண்டுமானால் கேட்டுப்பார்க்கலாம்.

---

புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத்துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது.

இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன. டங்கல் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர். பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது.

“சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப்பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”

“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சராகவும், சிதம்பரம் நிதித்துறை இணையமைச்சராகவும் இருந்தபோதுதான் இத்தகைய மாற்றங்கள் தொடங்கின. மாநில சுயாட்சி முழக்கத்துடன் அரசியலுக்கு வந்தவர்கள் துணையுடன்தான் இந்த மாற்றங்கள் முழுவேகத்தில் நடைபெறுகின்றன.

இதற்கு என்ன தீர்வு என்பது தனிநபர்கள் எடுக்கும் முடிவுகளில் இல்லை. இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், உங்களின் செயல்பாடுகளும்தான் உங்கள் வாழ்க்கையை, உங்கள் சந்ததிகள் வாழ்க்கையை பாதுகாக்கும்.

நன்றி: மக்கள் சட்டம்

கருத்துகள் இல்லை: