செவ்வாய், 20 ஜூலை, 2010

ஜாதிக்கறை காக்கும் இந்தியா

ஜாதிக்கறை காக்கும் இந்தியா
நீக்கும் அயல் மண்

கவிஞர் கலி.பூங்குன்றன்

2001 ஆம் ஆண்டு தென்னாப்-பிரிக்காவின் டர்பனில் ஒரு முக்கியமான மாநாடு. இனவெறி, இனப்பாகுபாடு, காழ்ப்புணர்வு, சகிப்புத்தன்மை, வெறுப்பு குறித்து விரிவாக ஆராயும் மாநாடு அது. இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து 40 அரசுசாரா அமைப்புகள் பங்குகொண்டன. அம்மாநாட்டில் இந்தியத் தரப்பிலிருந்து மிக முக்கியமான குரல் எழுப்பப்பட்டது. அதுதான் இந்தியாவில் நிலவும் பிறப்பின் அடிப்-படையிலான ஜாதியைப் பற்றியதாகும்.

ஜாதி உணர்வு என்பது இன ஒதுக்கலுக்குச் சற்றும் குறைந்த தீமையல்ல என்று எடுத்துக் கூறப்பட்டது. இந்தியாவில் நிலவும் ஜாதிப் பாகுபாட்டை மாநாட்டு நிரலில் இணைக்க வேண்டும் என்று போராடினர். இது பெரும் சர்ச்சைத் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது.

அப்பொழுது இப்பிரச்சினையில் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாரதிய ஜனதா அரசு, இந்துத்துவா கட்சியின் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாகும்.

மாநாட்டு ஆவணங்களில் இந்தியாவில் ஜாதித் தொடர்பான எந்தக் கருத்தும் பதிவாகாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டது. அது குறித்து எந்தவிதத் தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் பார்த்துக்கொள்ளப்-பட்டது.

அதுதான் அப்படிப் போயிற்று என்றால், டர்பன் மாநாடு முடிவில் அதன் பின் தொடர்-பான செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்ய 2009 ஏப்ரல் 20 _ 24 நாள்களில் ஜெனிவாவில் அய்.நாவின் மனித உரிமைகளின் மாநாடு ஒன்றைக் கூட்டியது. இந்த மாநாடும் பழைய டர்பன் மாநாட்டின் கோலத்தோட முடிந்தது என்பது மகா வெட்கக்கேடு.

40 அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். ஆனால், இவர்களின் கருத்துகள் அம்பலம் ஏறாமல் காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (UPA) பார்த்துக் கொண்டது.

இந்தியாவில் உள்ள ஆட்சி பா.ஜ.க வாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி அவற்றுக்குக் குறியெல்லாம் இந்துத்துவா நோயால் பீடிக்கப்பட்ட ஜாதிய நரம்புகளில்-தான் ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது இதன் மூலம் வெளிப்பாடு.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி _ எனின் அந்நியர் புகல் என்ன நீதி என்ற பாரதிப் பார்ப்பானிலிருந்து பாரதியப் பார்ப்பான்கள்-வரை பாரதத்தாயின் ஜாதிப் பாஷாணம் வெளியில் தெரியாமல் பதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதிலே விடாப்பிடியாக உள்ளனர்.

உலகின் ஒரே இந்து நாடு என்று கூறப்பட்ட நேபாளம் எடுத்த முடிவு வேறு மாதிரியாக இருந்தது (இப்பொழுது ஆட்சி மாறிவிட்டது என்பது உண்மையே!) அய்.நா. வெளியிட்ட வேலை மற்றும் இருப்பிடங்களில் ஜாதிப்பாகுபாடு ஒழிப்பு குறித்த வரைவுக் கொள்கைக்கு முழு ஆதரவைத் தருவதாக நேபாளம் தெரிவித்தது. இது தொடர்பாக நேபாள அமைச்சர் ஜீத் பகதூர் டார்ஜீ கவுதம் கூறுகிறார்.

ஜாதி ஒழிப்புத் தொடர்பான மனித உரிமை அமைப்பின் ஆவணத்துக்கு முழு ஒத்துழைப்புத் தருவோம், ஜாதிப் பாகு பாடுகளுக்கு எதிரான அவர்களின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு உதவுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நேபாள அரசின் இந்தக் கருத்தியலுக்கு அய்.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்-பிள்ளை வரவேற்றுப் பாராட்டியுள்ளார். ஜாதிப் பிரச்சினைகள் பெருமளவில் தாண்டவ-மாடும் நேபாளம் முக்கியத்துவம் வாய்ந்த குரலை எடுத்துக் காட்டியதை, அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.

2009 மார்ச் மாதத்தில் அவர் இந்தியா வந்திருந்த போது இந்திய அரசிடம் வலியுறுத்தினார். ஜாதிப் பிரச்சினை இந்தியா-வின் தேசியப் பிரச்சினைகளில் ஒன்று. ஆதலால், தலைவர்கள் அதற்கு எதிராகப் போராட-வேண்டும். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தீண்டாமை ஒரு இனவெறிச் செயல் எனக் கூறியும் நவநீதம் பிள்ளை நினைவுப்படுத்தினார். (நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்கத் தமிழர்; தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)

அய்.நாவின் ஆவணம் குறித்து அய்ரோப்பிய யூனியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜாதிப் பாகுபாடுகளைக் களைவதே அய்ரோப்பிய யூனியனின் முக்கியக் குறிக்கோள். இந்தப் பிரச்சினை தொடர்ந்தால் மனித உரிமை ஆணையம் எதிர்காலத்தில் இதற்கு எதிராக வரைவுக் கொள்கையைத் தயாரித்து அய்.நாவின் பொதுச் சபையில் தாக்கல் செய்யும். இரண்டா-வது ஜாதிப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று அய்ரோப்பிய யூனியனின் அறிக்கை கூறுகிறது.

உண்மையை ஒப்புக் கொள்ளும் உள்ளம் நேபாளத்திற்கு இருக்கிறது. ஜாதிப் பிரச்சினை-களுக்குத் தீர்வுகாணும் பொறுப்பும் அய்ரோப்பிய யூனியனுக்கு உண்டு.

ஆனால், ஜாதி அமைப்பாளர்களின் சின்னமான இந்துத்துவா நெருப்புடன் மோதும் மனப்பான்மையுடன் பிரச்சினைகளை அணுகு-கிறது. இந்தியப்பூனை தன்கண்களை இ-றுக மூடிக் கொண்டு, பூலோகம் இருண்டு விட்டது என்று கீச் மூச் சத்தம் கொடுக்கிறது.

யானைக் காலை மண் புதையலில் மறைத்துக் கொண்டால் அந்த நேரம் இல்லை என்று ஆகிவிடுமோ. ஜாதிப் பாகுபாட்டிற்கு எதிராகப் பிரிட்டனில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுப் பாரதியப் பார்ப்பனியம் இந்திய நாட்டின் முகத்தில் கரியை மிக அழுத்தமாகப் பூசிவிட்டது. இந்தியாவில் மனிதன் பிறக்கும்போதே ஜாதித் தொப்புள் கொடியோடு பிறக்கிறான். அவன் செத்துப் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும் இடுகாடு_ சுடுகாட்டில்கூட ஜாதிப்-பாகு-பாடு உண்டு. இந்தியாவில் மனிதன் சாகிறான். ஆனால், அவனைப் பிறப்பில் பிடித்துக்-கொண்ட ஜாதி மட்டும் சாவதில்லை.

பல கோடிக்கணக்கான உடன் பிறப்புச் சகோதரர்களை இன்னமும் தீண்டத்தகாத மக்களாக வைத்துக் கொண்டு எங்களைப் பார்த்துக் கண்டனம் செய்ய மிஸ்டர் காந்திக்கு முகம் ஏது என்ற கேள்வியை நாக்கைப் பிடுங்குவதுபோலக் கேட்டார் இங்கிலாந்தின் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில். ஏதோ சந்து முனையில் அல்ல, பிரிட்டன் நாடாளுமன்றத்தி-லேயே இவ்வாறு பேசினார்.

சர்ச்சில் மீது கோபம் கொப்பளிக்கலாம்_ ஆனால், அந்தக் கோபத்தில் நியாயத்தராசு இல்லையே. இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக இருந்த காகா கலேல்கர் தம் அறிக்கையில் (பக்கம் 40) இந்தியாவில் நிலவும் ஜாதிகளின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதி அமைப்பானது உலகில் எங்கும் கிடையாது இங்குதான் இருக்கிறது. பொருளா-தார முன்னேற்றம் அடைந்தால் சமுதாய அமைப்பு மாறிவிட்டால் _ ஜாதி ஒழிந்து விடும் என்கிறார்கள் சிலர் அந்த வாதம் தவறான-தாகும். ஜாதி காரணமாகத்தான் பிற்படுத்தப்-பட்டோருக்குக் கல்வியில்லை_ உணவு இல்லை _ உடை இல்லை. இது பொருளாதார அமைப்பினால் வந்தது என்பது தவறு. ஜாதி அமைப்பினால்தான் பொருளாதார வேறுபாடு இருந்து வருவது உண்மையாகும். பொருளா-தாரத்-தினால் பின்னடைந்து நிற்பது ஜாதியினால் ஏற்பட்ட விளைவே தவிர ஜாதி தோன்று-வதற்குரிய காரணமல்ல.

ஆசியன் டிராமா என்ற நூலை எழுதிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த குன்னர் மர்தஸ் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். Caste is deeply entrenched Indian tradition and it could be removed only by a drastic surgery.

(இந்தியச் சமூகத்தில் ஜாதி என்பது மிகக் கடுமையாக ஊடுருவியுள்ளது. அறுவைச்சி-கிச்சை மூலம்தான் அதனை அகற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்றுதானே பொருள்.

நாடு, மதம், பழக்கவழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்த நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்?

கருத்துகள் இல்லை: