சனி, 24 ஏப்ரல், 2010

அம்பேத்கர் பேசுகிறார்...

எந்த மக்களிடையே பிறந்தோமோ அம்மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்று விழிப்புணர்வு பெற்று வீறு கொண்டெழுந்தவர்கள் வாழ்த்துக்குரியவர்கள். தங்களுடைய நேரத்தை திறமைகளை மற்றுமுள்ள அனைத்தையும் அடிமை விலங்கை உடைப்பதற்காக அளிப்பவர்கள் பெருமைக்குரியவர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மனித உரிமைகளை பெறும்வரையில் பெரும் துன்பங்களுக்கும் அச்சுறுத்தும் ஆபத்துகளுக்குமிடையில் செயலாற்றி அடிமைப்படுத்தப்பட்டு கிடக்கும் மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடுபவர்கள் பெரும் புகழுக்கு உரியவர்கள்.


சாதி என்பது இந்துக்கள் ஒருவரோடொருவர் கலந்து விடாமல் தடுக்கின்ற செங்கல்சுவரோ, முள்வேலியோ அல்ல. சாதி வெறும் ஒரு சுவராகவோ, வேலியாகவோ இருந்தால் அதைத் தகர்த்துவிடலாம். சாதி என்பது ஒரு கண்ணோட்டம். ஒரு மனநிலை. எனவே சாதியைத் தவிர்ப்பது என்றால் ஒரு பௌதீகத் தடையைத் தகர்ப்பது என்பதல்ல. சாதியைத் தகர்ப்பது என்றால் இந்துக்களின் மனநிலையில் ஒரு மாறுதல் உண்டாக்க வேண்டும் என்பதேயாகும்.


அம்பேத்கரியலில் சில வார்த்தைகள்


* இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான சாதிகளும் மூடத்தனங்களும் இருந்து கொண்டிருக்கும் நாள் வரைக்கும் நாம் ஏனையநாடுகளின் முன்பாக தலை நிமிர்ந்து வாழ இயலாது. வெட்கி தலைகுனிந்துதான் வாழ வேண்டும்.


* தீண்டாமை மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இது அடிமைத்தனத்தைக் காட்டிலும் மிகவும் மோசமானது.


* ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமைகளாக தன் மானத்தை இழந்து இருப்பதைக் காட்டிலும் அரை நிமிடம் வாழ்வாங்கு வாழ்ந்து அமரனாதல் சாலச் சிறந்ததாகும்.


* பிறந்தவன் சாவான் என்பது இயற்கை. அதைக் கண்டு நான் பயப்படவாப் போகிறேன். ஆனால் சீறிய இலட்சியமாகிய சுயமரியாதையை மேலும் வளர்ப்பதில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அதுதான் மனித வாழ்விற்கே சிறப்பாகும். நாம் அடிமைகளன்று. நாம் போர்வீரர்கள் வகுப்பைச் சார்ந்தவர்கள். சுய மரியாதை இல்லாமல் நாட்டுப்பற்று இல்லாமல் வாழ்வதைவிட சாவதே ஒரு வீரனுக்கு உகந்த வழியாகும்.


* ஒருவன் உள்ளத்தால் சுதந்திர நிலை என்றால் அவன் சிறையில் அடைக்கப்படாவிட்டாலும்கூட சிறைக்கைதியே ஆவான். ஒரு மனிதன் உள்ளத்தால் சுதந்திரம் இல்லையென்றால் அவன் வாழ்ந்து கொண்டிருப்பதாலும்கூட செத்தப்பிணமாகவே கருதப்படுவான்.


* யார் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் புது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, யார் ஒருவன் அடுத்தவன் கைப்பாவையாய் மாறாமல் போதிய சிந்தனைகளையும், சுய மரியாதையையும் பெற்றிருக்கிறானோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.


* 1950 ஜனவரி 26-ம் நாள் நாம் அரசியலில் சமத்துவம் அடைந்திருக்கிறோம். ஆனால் சமூக பொருளாதார வாழ்வில் சமத்துவமற்ற நிலையில் உள்ளோம். நாம் இந்த முரண்பாட்டை வெகுவிரைவில் போக்கிட வேண்டும். இல்லையெனில் இச்சமத்துவ மின்மையால் துன்பப்படுவோர் இந்த அரசின் ஜனநாயக அமைப்பை உடைத்தெறிந்து விடுவர்.


* எளிதில் தண்ணீரில் கரைந்தோடும் களிமண் போன்று நான் இருக்கவில்லை. நான் ஆறுகளை திசை திருப்பிவிடும் உறுகிவிடாத கற்பாறை போன்றவன். நான் எங்கிருந்தாலும் எப்படிப்பட்டவரின் நட்பு கிடைத்தாலும் என்னுடைய தனித் தன்மையை எப்போதும் இழந்து விட மாட்டேன்.


* உங்கள் அடிமை நிலையை நீங்களே அழித்து ஒழித்திட வேண்டும். இதற்காக கடவுளையோ விபரித சக்திகளையோ நம்பியிருக்க வேண்டாம். உங்கள் விடுதலை அரசியல் அதிகாரத்தில்தான் இருக்கிறதேயொழிய பாத யாத்திரைகளிலோ விரதங்களிலோ அல்ல.


* அரசியல் கொடுமையைவிட சமூக கொடுமையே மிகப் பயங்கரமானது. எனவே அரசியல் கொடுமையைவிட சமூக கொடுமையை எதிர்த்து போராடும் சமூக சீர்திருத்தவாதியே அதிதைரியசாலி.