ஞாயிறு, 11 ஜூலை, 2010

மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்

எப்போதெல்லாம் எரிபொருள் விலை உயர்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கின்றன என்பதே பல்லவியாய் திரும்பத்திரும்ப பாடப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. வருவாய் இழப்பு என்பதைத்தான் நட்டம் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபத்திலேயே இருக்கின்றன. கடந்த 2009 – 2010 நிதியாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் 10,200 கோடியும்; பாரத் பெட்ரோலியம் 1,500 கோடியும்; ஹெச்.பி.சி.எல் 1,300 கோடியும்; ஓ.என்.ஜி.சி 16,700 கோடியும்; கைல் 3,140 கோடியும் லாபமாக ஈட்டியுள்ளன. இந்த நிலையில் பெட்ரோலிய நிறுவனங்கள் நட்டத்தை சந்திப்பதால் விலை உயர்வு என்பது யாரை ஏமாற்ற?

சர்வதேச அளவில் தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 77 டாலராக விற்கிறது. இதன்படி ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் சற்றேறக்குறைய 34 ரூபாய் வருகிறது. இந்தக் கச்சா எண்ணெயிலிருந்துதான் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கச்சா எண்ணெயைப் பொருத்தவரை கழிவு என்பதே கிடையாது. பாரபின் மெழுகு போன்ற அனைத்துப் பொருட்களும் பிரித்தெடுத்தபின் எஞ்சியிருப்பது சாலை போட பயன்படுத்தும் தாராகிறது. 34 ரூபாய் கச்சா எண்ணெயிலிருந்து பல பொருட்களைத் தயாரித்தும், பெட்ரோல் விலை ரூபாய் 55 வரை விற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கின்றன என்பது எப்படி?

எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதற்கும், பெட்ரோல் டீசல் விலை இந்த அளவு உயர்வாய் விற்கப்படுவதற்கும் சர்வதேச அளவில் விலை ஏறுவதும் இறங்குவதும் காரணமல்ல. அது மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகளில் நிலை கொண்டிருக்கிறது. தற்போது விற்கப்படும் பெட்ரோல் டீசல் விலையில் 51.25 விழுக்காடு வரிகள் தாம், அதாவது நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் விலையில் பாதிக்கும் சற்று அதிகமாக வரியாகத்தான் கொடுக்குறோமேயன்றி பெட்ரோலுக்கான விலையாகவல்ல. மத்திய மாநில அரசுகள் வரியைக் குறைத்துக்கொண்டாலே விலை உயர்வுக்கு அவசியமில்லாமல் போகும். ஆனால் அரசுகள் தங்கள் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளையும், முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளையும் சமாளிப்பதற்கு பெட்ரோல் டீசல் மீது விதிக்கும் வரிகளையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. இப்படி கோடிகோடியாக வரி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் அரசுகள், அதில் கொஞ்சம் மானியமாக தந்துவிட்டு அதனால் தான் நட்டம் என நாடகமாடுகின்றன.

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும், பெட்ரோலியப்பொருட்களுக்கு மானியம் தந்து மக்களைக் காப்பதுபோல் ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. பெட்ரோலியப் பொருட்களிலிருந்து வரியாக அரசு பெறும் தொகையோடு ஒப்பிட்டால் மானியம் என்பது ஒன்றுமில்லை என்பது ஒருபுறமிருக்க, இந்த அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, முதலாளிகளுக்கு வழங்கும் சலுகைகளை வெளிப்படையாக சொல்வதில்லை. கடந்த நிதிநிலை அறிக்கையில் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு கம்பனி வரி உள்ளிட்ட நேரடி வரிவிதிப்புகளில் அளித்திருக்கும் சலுகை மட்டும் 80,000 கோடியாகும். இது தவிர கலால் வரி, சுங்கவரி போன்ற வரிவிதிப்புகளிலிருந்து அளிக்கப்பட்டுள்ள சலுகை மொத்தம் 4,19,786 கோடியாகும். அதாவது ஒரு ஆண்டில் மொத்தம் 5 லட்சம் கோடியை முதலாளிகளுக்கு மானியமாக அள்ளிக்கொடுத்துவிட்டு, பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியம் கொடுப்பதால் அந்நிறுவனங்கள் நட்டமடைகின்றன என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் அல்லவா?

கருத்துகள் இல்லை: