புதன், 25 மார்ச், 2009

தீஸ்தா செடவால் - பத்திரிகையாளர்

சாதியத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒருபோதும் நாம் மதவாதம் குறித்துப் பேச முடியாது. நாட்டின் வேறு எந்தப் பகுதியை விடவும் திராவிடப் பண்பாட்டின் இதயமாக இருக்கும் தமிழகத்திற்கு இந்த அடிப்படை நன்றாகத் தெரியும். எவ்வாறு சாதியத்தின் மூலம் தன் சொந்த மக்களையே சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி, மிகக் கடினமாக வேலைகளை அவர்கள் மீது திணித்ததோடு மட்டுமின்றி, அதை இழிவாகவும் சித்தரிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்து மதத்தின் கொடூர முகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதியமும் மதவாதமும்; சாதியத்துக்கு எதிரான வன்முறையும், மதவாதத்துக்கு எதிரான வன்முறையும் ஒன்றுதான். அதனால் மதவாதத்தை எதிர்க்கின்றவர்களும், சாதி வெறுப்புக்கு எதிரான சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.நாடாளுமன்றத்தைப் போல் அல்லாமல் நமது பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, 33 சதவிகித இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்ததோடு, தலித் பெண்கள், முஸ்லிம் பெண்கள், பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கிராம அளவிலான அரசியலில் பங்கேற்க அனுமதித்திருக்கிறது. ஆனால் என்ன மாதிரியான மதச்சார்பற்ற ஜனநாயக சமூகம் நம்முடையது? மக்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலித் பெண்மணி, சனவரி 26 அன்று தேசியக் கொடியை ஏற்ற முற்படும் சொந்த கிராமத்திலேயே நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் என எங்கும் இதே நிலைதான். தன் தேசம், நாட்டுப்பற்று, தேசியம் என்றெல்லாம் சொந்தம் கொண்டாட ஒரு தலித் பெண்ணுக்கு உரிமையில்லை. அதனால் அறுபதாண்டுகளை கடந்துவிட்ட சுதந்திர இந்தியாவில் - இன்று உண்மையான, உயிர்த் துடிப்புள்ள ஜனநாயகத்துக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

கருத்துகள் இல்லை: