புதன், 21 ஜனவரி, 2009

"கேள்விக் கேட்டக் தெரிந்த வரலாற்று நாயகன்"

இரண்டாயிரத்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்கில், ´ஆதென்ஸ்´ என்ற இடத்தில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். இவரைப் பற்றி வரலாற்றில் ஒரு மதிப்பிடு உண்டு. "கேள்விக் கேட்டக் தெரிந்த வரலாற்று நாயகன்" என்பார்கள். சொல்லுவதை அப்படியே நம்பிக் கொண்டு, அவை குறித்த தர்க்க விவாதங்கள் எதையும் செய்யாமல், அப்படியென்றால் என்னவென்றே தெரியாத மக்கள் கூட்டத்தில் சாக்ரடீஸ் வித்தியாசமாக இருந்தார். சமூக பழக்க வழக்கங்களை ஆராய்வதும், அரசு அமைப்பின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், எதிர் கேள்வியுமாக இருந்ததோடல்லாமல், நிறைய விவாதங்களுக்கென நேரம் ஒதுக்கி பேச ஆரம்பித்திருந்தார். இதென்ன பிரமாதம்! உட்கார்ந்து ஊர் கதை பேசிக்கொண்டு, இடக்கு மடக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டிருப்பது ஓர் ஆச்சரியமான விஷயமா? என்று நமக்கு தோன்றலாம். இன்றைய மனிதனின் அறிவை விட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் சிந்தனையில் கேள்விகளுக்கோ, சிந்தனைகளுக்கோ இடமில்லை. அன்றைய மனிதனின் அறிவு அப்படி.நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, சம்பிரதாயம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். அவரின் பேச்சுக்களும், புதிருக்கான விடைகளையும், நயத்துடன் எடுத்துப் பேசும் போது பொது மக்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. ஆதென்ஸ் இளைஞர்களுக்கு சாக்ரடீஸ் ஹீரோவாக இருந்தார். அந்த கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது. கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக்கொள்கைகளையெல்லாம் சாக்ரடீஸை சிந்திக்க வைத்ததல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது. ஆதென்ஸ் அரசுக்கு இந்த விஷயம் எட்டியது. சாக்ரடீஸ் மீது குற்றம் சுமத்திய ´அனைட்டஸ்´ என்பவன் ஓர் அரசியல்வாதி. நகரத்தில் இருக்கும் சொந்த தெய்வங்களை வணங்காமலும், அவை குறித்து தவறான விமர்சனங்களை செய்ததாகவும், சமய ஆச்சாரங்களின் ஒழுக்கங்களை கடைப்பிடிக்கத் தவறியதாகவும் - இளைஞர்களுக்கு மாற்று கருத்துக்களை புகுத்தி திசை திருப்ப முயன்று சமூகத்தின் பழக்க வழக்கங்களை கெடுக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் ஐநூறு பேர்களுக்கும் மேல் நடுவர்களாக இருந்தார்கள். அக்காலத்தில் விசாரணைக்குரிய சட்டத்திட்டங்கள், சாட்சிகள், வாக்குமூலம், குறுக்கு விசாரணை போன்றவைகள் கிடையாது. அதிகாரங்கள் அரசியல்வாதிகளிடம் இருந்தது. அவர்கள் சொல்வதே சட்டநெறி. அப்படி இருக்கையில், அனைட்டஸ் அரசியல் செல்வாக்கு பெற்றவன். அவன் சாக்ரடீஸ் மீது பிராது கொடுத்திருக்கிறான். அந்த காலத்தில் சமயம் குறித்து தவறாக ஏதாவது ஓர் வார்த்தையை உபயோகித்தாலே தலையை வெட்டும் அளவுக்கு தண்டனை உண்டு. சாக்ரடீஸ் இளைஞர்களை திசை திருப்ப முற்பட்டார். சமயத்தை விமர்சித்தார் என்றால் சும்மா விட்டுவிடுவார்களா? அனைட்டஸ்க்கு சாக்ரடீஸ் மீது மிகுந்த பொறாமை இருந்தது. சாக்ரடீசின் பேச்சுத்திறமை, அறிவுத்திறமை அவர் பேசுவதை ´ஆ´வென வாய்யைப் பிளந்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க ஒருபெருங் கூட்டமே இருந்தது. அரசியல்வாதிகளை குறித்து மக்களிடம் முன்பு இருந்த மரியாதையெல்லாம் சாக்ரடீசின் விவாதத்தால் தெளிவடைந்த மக்களிடம் மரியாதை இல்லாமல் போய்விட்டது. மக்களுக்குள்ளும் அரசியல்வாதிகளை குறித்து நக்கலாக பேசுவதும், ஏளனமாக பார்ப்பதுமாக மாறிப்போய்விட்டது. அரசின் செயல்பாடுகளில் இருந்த தில்லு முல்லுகளை குறித்தெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர். இவை நடந்த சில ஆண்டகளுக்கு பிறகுதான் இப்படியே விட்டால் கதை கந்தலாகிவிடும் என்று, அனைட்டஸ் அரசிடம் தவறான முறையில் போட்டுக் கொடுத்துவிட்டான். அரசுக்கு எதிராக மக்களையோ, அல்லது இளைஞர்களை சீரழிக்க வேண்டுமென்ற எண்ணமோ சாக்ரடீஸிடம் இல்லை. விவாதிப்பதை, சிந்திக்க வைப்பதை, அதன் மூலம் கேள்வி கேட்கும் அறிவை வளர்க்கவே சாக்ரடீஸ் முற்பட்டார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. சாக்ரடீஸிடம் அன்பு கொண்டிருந்த மக்களும், நண்பர்களும் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டு ஒடிப்போய்விடுங்கள் என்றனர். சாக்ரடீஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு குடிமகனை விசாரிக்கும் தகுதி அரசுக்கு உண்டு. அப்படியிருக்க அவ்விதிமுறைகளை மீறி ஊரைவிட்டு போகும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. அவ்வாறு செய்வதே கிரேக்க குடிமகனின் பெருங்குற்றமாகும் என்றார். என்ன நடந்தாலும் ஆதென்ஸ் நகரை விட்டு போகமாட்டேன் என்றார். விசாரணையில் பல தவறான பொய்யான பழிப்புகள் சாக்ரடீஸ் மீது சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. சில நடுவர்கள் அத்தீர்ப்புக்கு ஆதரவாக இல்லை. பலருக்கு பொய்யான குற்றச்சாட்டுக்கள் சாக்ரடீஸ் மீது சுமத்தப்பட்டது என்பது தெரியும். இருப்பினும், அனைட்டஸ் அரசியல் செல்வாக்கு அவர்களை மிரட்டியது. தண்டனையும் கொடுத்தாகிவிட்டது. இனி அரசு தீர்ப்பையும் மாற்ற முடியாது. சாக்ரடீஸிக்கு ஆதரவான நடுவர்களுக்கு கண்கள் கலங்கின. சாக்ரடீஸ் அவர்களை பார்த்து சொல்கிறார் :"இந்த தீர்ப்பு எனக்கு பெரிய தீங்கானது இல்லை. இடையீடு இல்லாதபடி ஒய்வு எடுப்பதே மரணம். எனவே, அதில் கெடுதல் இருக்க முடியாது. நல்ல மனிதனுக்கு வரும் மரணம் அவனை இன்னொரு சிறப்பான வாழ்வுக்கு அவனை கொண்டு செல்கிறது என்பது என் நம்பிக்கை. அம்மறு உலகத்தில் இருக்கும் நடுவர்கள் இத் தவறான தீர்ப்பை அழித்து நான் குற்றமற்றவன் என்பதை வெளிப்படுத்துவார்கள். என்னைப் போல் நியாயமற்ற முறையில் அரசால் தண்டிக்கப்பட்ட புகழ்பெற்ற அமரர்களையும் சந்திக்கப் போகிறேன். அவர்களுடன் நான் விவாதத்தில் ஈடுபடுவேன். அவர்களை கேள்வி மேல் கேள்வி கேட்பேன். அங்கு கேள்வி மூலம் நிஜங்களை கண்டடைய தடையொன்றும் இருக்காது. உண்மையை கண்டடைய முற்படுபவனை அங்கு சிறையில் அடைத்து தண்டனை கொடுக்கவும் முடியாது. இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கிய ஆதென்ஸ் நடுவர் குழுவுக்கு நன்றி" என்கிறார். அவர் பேசி முடித்ததும், தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பை ஆதென்ஸ் அரசு பதினொருவர் அடங்கிய குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்படுகிறது. இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும். அப்போது, ஆதென்ஸ் நகரில் அப்பாலோ என்ற தெய்வத்தின் விழா நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்விழாவில் ´அப்பாலோ´ தெய்வம் ஃடெலோஸ் என்றும் ஊரில் இருக்கும் திருத்தலத்திற்கு காணிக்கையாக பல பொருட்களை படகின் மூலம் திருத்தலத்திற்கு கொண்டு போய் காணிக்கையை கொடுத்துவிட்டு, அப்படகு திரும்பி ஆதென்ஸ் நகரத்திற்கு வரும் வரை அந்நகரில் இருந்து யாரும் வெளி ஊர்களுக்கு செல்ல மாட்டார்கள். அரசும் தண்டனைகளோ எதுவும் இருக்காமல் அவ்விழா நாட்களில் தெய்வத்தின் புனிதத்தன்மையை பாதுகாத்து வருவது ஐதீகமாக இருந்தது. காணிக்கை கொண்டு செல்லும் அப்படகை கூட மிகப் புனிதமாக பாதுகாத்து ´புனிதப்படகு´ என்று வழங்கி வந்தனர் என்றால், ஆதென்ஸ் மக்களின் அவ்விழா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி இருப்பர் என்பதை உணரலாம். சாக்ரடீஸிக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, அப்பாலோ தெய்வத்தின் விழா நடந்துக் கொண்டிருக்கிறது. அப்பாலோவின் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு ஃடெலோஸ்க்கு சென்ற புனித படகு இன்னும் ஆதென்ஸிக்கு வரவில்லை. சாக்ரடீஸிக்கு தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. புனிதப்படகு சரியான காலப்படி ஆதென்ஸிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் காணவில்லை; என்னாயிற்று புனிதப்படகுக்கு என்ற கவலை ஒரு பக்கம். சரி சாக்ரடீஸை என்ன செய்வது? படகு வரும்வரை தற்காலிகமாக வெளியில் விடலாமா என்று யோசனை வந்தபோது சாக்ரடீஸிக்கு எதிராக இருந்தவர்கள் மறுப்பு தெரிவித்தனர். புனிதப்படகு வரும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாவிட்டாலும் சிறையில் அடைத்து வைத்திருந்து புனிதப்படகு வந்தபின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டது. சிறைக்குள் அடைக்கப்பட்ட சாக்ரடீஸை பார்க்க மனைவி ஸாந்திப்பே, பிள்ளைகள், சில முக்கிய நண்பர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். சிறையில் சந்தித்த சில நண்பர்கள் சிறையில் இருந்து தப்பிச் செல்வதற்கு கட்டாயப்படுத்திய போதும் சாக்ரடீஸ் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இழிவான செயல் அவை என்றார். அவர் சொல்வதை கேட்காமல் அவரின் நண்பர்கள் தப்பிச் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவருக்கே தெரியாமல் செய்துவிட்டு, கடைசியில் வந்து சாக்ரடீஸை அழைத்துக் கொண்டு போக முற்பட்ட போது; முடியவே முடியாது என்று கண்டிப்போடு மறுத்துவிட்டார். "சிறைக் கைதி தப்பித்து ஓடுதல் சட்டத்திற்கு எதிரானவை. அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் என் சொந்த மனசாட்சே என்னை கொன்றுவிடும். என் மனச்சாட்சிக்கு எதிரான நடவடிக்கையை நான் எடுக்கமாட்டேன்" என்று தெளிவாக விளங்க வைத்த பின் தப்பி ஓடும் எண்ணத்தை நண்பர்கள் கைவிட்டனர். புனிதப்படகு ஒரு வாரம் வரையில் வானிலை கோளாறு காரணமாக குறிப்பிட்ட நாட்களுக்குள் வராமல் போய்விட்டது என்று குமுறிக் கொண்டு தரித்திரம் பிடித்த படகு ஆதென்ஸ் வந்து சேர்ந்தது. புனிதப் படகைக் கண்டதும் ஆதென்ஸ் மக்களுக்கு பதற்றமும், பயமும் பிடித்துக் கொண்டது. சாக்ரடீஸை நினைத்து அழுதனர். ஒரு நல்லவனுக்கு கிடைக்கப்போகும் கொடிய தண்டனையை நிறைவேற்றிவிடப் போகிறார்களே என்று ஆதென்ஸ் நகரத்தில் சோகம் பிடித்துக் கொண்டது. கடைசியாக மனைவி பிள்ளைகளுடன் சில மணித்துளிகள் பேச அனுமதிக்கப்பட்டனர். மாலை நேரம் பதினொருவர் குழுவின் தலைவன் சாக்ரடீஸை வந்து சந்திக்கிறார். கண்கள் கலங்குகிறது தலைவனுக்கு; சாக்ரடீஸை சோதிக்கிறார். மௌனமாக வெளிவே செல்கிறார்; அவரின் தலை அசைகளுக்கு அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறது. ´ஹெம்லாக்´ என்னும் கொடிய நஞ்சு உள்ள கோப்பையை சாக்ரடீஸிக்கு கொடுக்கப்படுகிறது.கிரேக்கர்கள் தாங்கள் உண்ணும் உணவில் சில துளிகளை தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்வது பழக்கமாக இருந்தது. ஆனால், அன்று சாக்ரடீஸ் உண்பதற்கு முன் சில துளிகளை தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யவில்லை. நஞ்சுவின் அளவு குறைவிடக் கூடாதல்லவா?சாக்ரடீஸின் உதவுகள் மெல்ல எதையோ சொல்லி முணுமுணுத்தன. பிராத்தனையாக இருந்திருக்கலாம். சங்கடப்படாமல், தயங்காமல் கோப்பையில் இருந்த நஞ்சு முழுவதையும் குடித்துவிட்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். சிலர் ஓவென பெருஞ் சத்தத்துடன் கதறவே சாக்ரடீஸ் அவர்களை பொறுமையாக இருக்கும்படி அடக்கினார். சிறை அலுவலர் சாக்ரடீஸை பார்த்து சிறைக்குள் நடக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் கட்டளைக்கு மறுப்பு தெரிவிக்காமல் சாக்ரடீஸ் எழுந்து நடக்க ஆரம்பித்தார். (ரத்த ஓட்டத்தில் சீக்கிமாக நஞ்சு கலக்க வேண்டும் என்பதற்காக) கால்கள் குளிர ஆரம்பித்தன... நடையில் தள்ளாட்டம்... சாக்ரடீஸால் முடியவில்லை... சாக்ரடீஸ் படுத்துக் கொண்டார்... அருகில் இருந்த வெளிளைப் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டார். முகம் கூட வெளில் தெரியவில்லை. சிறிது நேரம் ஒரே அமைதி. திடீரென சாக்ரடீஸ் முகத்தில் இருந்த வெள்ளைத் துணியை விலக்கினார். "கிரிட்டோ, அங்களெபியஸீக்கு நான் ஒரு சேவல் கொடுக்க வேண்டும். கடனை அடைக்க மறந்துவிடாதே"இதுதான் சாக்ரடீஸ் பேசிய கடைசி வார்த்தை. மீண்டும் வெள்ளை போர்வையால் முகத்தை மூடிக்கொண்டார். உடம்பில் சில துடிப்பு தெரிந்தது. சில மணிநேரத்திற்கு பின் நண்பர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. சாக்ரடீஸின் நண்பர் கிரீட்டோ போர்வையை நீக்கி பார்த்த போது கண்கள் திறந்தபடியும், வாய் திறந்தபடியும் சாக்ரடீஸின் உயிர் பிரிந்திருந்தது. சாக்ரடீஸின் இமையையும் வாயையும் மெல்ல மூடினார் கிரீட்டோ.

கருத்துகள் இல்லை: