”அட, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் எல்லோரும் தமிழர்கள் தான்,” என்று பட்டென சொல்ல தோன்றினால், “அப்படியானால் தமிழ் நாட்டில் வாழும் உருது பேசுபவர் தமிழரா?” “வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்கள் இல்லையா?” என்ற கேள்வியும் வரும்.
அப்படியில்லை, அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் பேசுபவராக இருந்தால் அவர் தமிழரே, என்று விளக்கம் சொன்னலோ, அப்படியானால் நெதர்லாந்துகாரரான கமில் ஸ்வெலிபில் எனும் தமிழ் அறிஞரும் தமிழர் தானா? ஒரு சாராசரி தமிழனை விட, அதிகம் தமிழை பற்றி தெரிந்துவைத்திருக்கிறவர் ஆயிற்றே. அப்படியானால் அவர் தமிழர் தானே? என்று வாதிட்டாலோ, “அதெல்லாம் இல்லை, அவருக்கு எவ்வளவு தமிழ் தெரிந்திருந்தாலும், அவருடைய அசல் தாய் மொழி டச்சு தான், அவர் சொந்த விருப்பத்திற்க்காக அவர் தமிழ் கற்றார்…. தேர்சி பெற்றார். அவர் தமிழுக்காக, எவ்வளவு சாதித்திருந்தாலும் அவர் தமிழர் ஆக மாட்டார். காரணம், அவர் தாய் மொழி தமிழே இல்லை” என்று பதில் வரும்.
இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு வேளை, தமிழ் பெற்றோருக்கு பிறந்தும், பல காலம் வெளி நாட்டில் வாழ்ந்ததால் தலைமுறை தலைமுறையாக, ஆங்கிலம், ஜெர்மன், அல்லது, ஃபிரென்ஞ்ச் மட்டுமே பேசும் தமிழ் தெரியாத மனிதராக இருந்தால், அப்போது அவர் தமிழரில்லையா? உதாரணம்: இன்று ஃபிஜி, மொரீஷியஸ், செஷல்ஸ், தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தீஸில் வாழும் பல தமிழ் வம்சாவழியினருக்கு தமிழே தெரியாதே. அவர்களின் தாய் மொழி என்று அவர்கள் நினைப்பது, அந்தந்த ஊரின் மொழியை மட்டும் தானே.
அல்லது, வேலை நிமித்தமாக தமிழ் நாட்டில் வசிக்க நேர்ந்ததால், தொன்று தொட்டு பல தலை முறைகளாக தமிழையே பேசிக்கொள்கிறார்கள் …..உதாரணத்திற்கு இன்று தமிழ்நாட்டில் வாழும் பல ரெட்டிமார்கள் வீட்டிலும், மனதிற்குள்ளும் தமிழை தான் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தெலுங்கே தெரிவதில்லை…..அப்படியானால் அவர்கள் தமிழர்களா?
அப்படி இல்லை, தமிழ் தெரியுமோ தெரியாதோ, அது அவ்வளவு முக்கியம் இல்லை. அவர்களின் பெற்றோர்கள் எந்த மொழியை பேசும் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் முக்கியம். பெற்றோரின் பூர்வீக மொழி மட்டும் தான் அடையாளம் என்றால், என் தாய் தமிழச்சி இல்லை, வேற்றூ மொழிகாரி என்றால், நான் தமிழர் இல்லையா?
இல்லை, உன் தந்தை தமிழராக இருந்தால் போதும், யாராவது ஒரு பெற்றோர் தமிழராக இருந்தாலே தமிழர் என்ற அந்தஸ்த்தை பெறலாம், என்றாலோ, அடுத்து வரும் கேள்வி, “அப்படியானால் தமிழ் என்பது மொழியின் அடையாளமா? இனத்தில் அடையாளமா?”
தமிழ் எனும் மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு பேசலாம், காந்திகூடத்தான் தென் ஆப்பிரிக்கா சிறையில் இருந்த போது தமிழை கற்றுக்கொண்டார், அதற்காக அவர் தமிழராகிவிட முடியுமா? அதெல்லாம் இல்லை, தமிழ் என்பது ஒரு இனம்.
சரி, இனம் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து, ஒரே ஆரம்ப மொழியை பேசி, ஒருமித்த கலாச்சாரம், கருத்தாக்கம், மரபு, நம்பிக்கை, ஆகியவற்றை பின் பற்றும் ஒரு குழுவை தான் இனம் என்போம். இப்படி ஆரம்பித்த இனம், பிறகு வெவ்வேறூ பாதைகளை தேடி பிரிந்து போனாலும், அவர்கள் ஆரம்பத்தில் ஒரே குடும்பமாக இருந்ததால், கடைசி வரை அவர்கள் சகோதரர்களே…..அதனால் தான் தமிழர், தெலுங்கர், மலையாளி, துலு, கன்னடக்காரர், என்ற மேலோட்டமான பிரிவினைகளை தாண்டி, அனைத்து திடராவிடமொழி பேசுபவர்களும் ஒரே கூட்டம் தான். காரணம் இவரக்ள் எல்லோருமே ஆரம்ப காலத்தில் ஒரே மொழியை பேசி, ஒரே இடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தவர் தான்.
அது சரி, ஆனால் இந்த திராவிட இனம் என்பது எங்கே, எப்போது, எப்படி தோன்றியதாம்? அது கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கு முன்னால் எல்லாம் தோன்றியது என்று நாம் மிகை படுத்தி, “முதலில் தோன்றிய மூத்த குடியாக்கும்” என்றெல்லாம் கதை விட்டுக்கொண்டிருக்க முடியாது. காரணம் இன்று எல்லா கூற்றூகளையும் அறிவியல் ரீதியாக பரிசோதிக்க முடியும்! மானுடம் என்ற ஜீவராசி தோன்றியே ஒரு மில்லியன் ஆண்டுகள் தான் ஆகின்றன, என்பது அறிவியல் உண்மை, அப்புறம், இந்த கல் தோன்றி, மண் தோன்றா காலத்து கதைகளை சொன்னால், அது அபத்தம் ஆகிவிடுமே!
கதை எல்லாம் எதுவுமில்லை, நிஜம் இது தான்: கிட்ட தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிந்து சமவெளியில் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள். ஆஸ்கோ பார்போலா என்ற மொழியியல் புணரும், ஐராவதம் மஹாதேவன் அவர்களும் தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார், சிந்து சவவெளி காரர்களின் எழுத்து ஆதி திராவிட எழுத்துவடிவம் தானாம்! என்றாலும், அடுத்த கேள்வி எழுகிறது…..சிந்து சமவெளிக்கு திராவிடர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அதற்கு முன்னால் அவர்கள் எங்கே இருந்தார்கள்?
எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் ஹொமினினே என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக்கொண்டே இருந்தது. இந்த ஹோமினினே குரங்கு தான் கிட்ட தட்ட ஐந்தாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சிம்பான்சி, போனோபோ, ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற மூன்று வகைகளாக பிரிந்தது. இதில் ஆஸ்திரலோபிதிகஸ் என்கிற வகை மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, உருமாறிக்கொண்டே போய், கிட்ட தட்ட ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருக்கும் மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் பேப்பியன்ஸ் என்கிற இனமாக உருவானது. இந்த இனம் தோன்றியது தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான். ஆரம்பத்தில் இந்த இனத்தில் ஜனத்தொகை சில நூறுகளாக மட்டுமே இருந்தன. இவை ஒரே மொழியை பேசின. ஒரே விதமான நம்பிக்கைகளை கொண்டிருந்தன. ஒரே விதமான மரபுகளை பின்பற்றின. உணர்ச்சிகள், தேவைகள், ஆசைகள், எண்ணங்கள், அவ்வளவு ஏன், உடல் மற்றும் மனநலநோய்கள் கூட இவற்றுக்கு ஒரே மாதிரி தான் இருந்தன. இந்த இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்தவெளிகளை நோக்கி பயணித்தன. இப்படி பரவிய இந்த மனித கூட்டம், கடந்த பத்தாயிரம் ஆண்களகாய், பல திக்குகளுக்கு பிரிந்து போயின. போன இடத்தில் புது புது உணவுகளை உட்கொண்டு, புது புது வாழ்க்கை முறைகளை பின்பற்றி, மொழியை மாற்றி மாற்றி பேசினாலும், இன்று வரை இவை அனைத்துமே ஒரு இனம் தான். உலகின் எந்த கோடியில் பிறந்த மனிதருக்கும், வேறு எந்த கோடியில் பிறந்த அடுத்தவர் ரத்த/உருப்பு தானம் செய்ய முடியும், இருவரது திசுகளும் பொருத்தமாய் இருந்தால். இதை விட பெரிய அதிசயம், இன்றும் மனிதர்களுக்கும் போனோபோ குரங்குகளுக்கு மரபணுக்கள் கிட்ட தட்ட 98% ஒரே மாதிரி இருக்கின்றனவாம், பொனோபோக்களின் உதிரத்தை மனிதர்களுக்கு செலுத்த முடியுமாம். பொனோபோக்களுக்கு மனிதர்களுக்கு இனகலப்பு செய்தால் குழந்தைகூட பிறக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஐந்தாறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே பிரிந்து போன சகோதர இனக்களான பொனோப்போவும் மானுடமும் இத்தனை ஒற்றூமைகள் இன்னும் இருக்கின்றன என்றால், பத்தே பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உணவை தேடி போனதில் பிரிந்து போன மனித வர்கம் இன்னும் எத்தனை நெருக்கமானதாக இருக்க வேண்டும்!
அதனால் தான் எத்தனை மொழிகளை நாம் பேசினாலும் எல்லா மொழிகளுமே தாயை, “மா” என்று தான் அழைக்கின்றன. அதனால் தான் நெதர்லாந்தில் பிறந்தாலும் கமில் ஸ்வெலிபில், மாதிரியான ஆசாமிகளுக்கு தமிழ் மீது ஆர்வம் வருகிறது. ஆக, எல்லா மனிதரக்ளும் அடிப்படையில் ஒன்று தான் என்றால் தமிழர்கள் என்பவர்கள் யார்?
ஆஃப்ரிக்காவில் தோன்றி, சிந்துசமவெளியில் நாகரீகம் கண்டு, திராவிட மொழியையும், கலாச்சாரத்தையும் தோற்றூவித்து, பல ராஜியங்கள் கண்டு, இன்னும் இன்னும் பல புதிய நிலபறப்புகளுக்கு பரவிக்கொண்டு இருக்கும் அந்த இனம் தான் தமிழ் இனம். இந்த பெரிய பயணத்தில் அவர்களின் மொழி மாறி இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கலாம்….ஆனால் தொடர்ந்து பயணிப்பதும், பிழைப்பதும், புதிய சூழலுக்கு தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டே போவதும் தான் இவர்களின் அடையாளங்கள். இவற்றை வைத்து இவர்களை நீங்கள் இனம் காணலாம்…..இப்பது சொல்லுங்கள் பார்ப்போம், தமிழர்கள் என்றால் யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக