சனி, 22 நவம்பர், 2008

பெண்களை அடிமைப்படுத்தவும் சாதிமுறைகளைக் காப்பாற்றவுமே மதச்சார்பு திருமண முறைகளை உண்டாக்கினர்!

பேரன்புமிக்க தோழர்களே! தாய்மார்களே! மணமக்களே!
நாம் ஏன் இப்படிப்பட்ட திருமணங்களை நடத்துகின்றோம்? முன்னோர்கள் முறையினை விலக்குகிறோம் என்றால் நம் ஜாதி இழிவு ஒழிக்கவும், கடவுள் மதம் சாஸ்திரங்கள் பேரால் கற்பிக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும், பெண்ணடிமையினை நீக்கவும், ஆணுக்குப் பெண் அடிமை அல்ல, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை- நிலைநாட்டவுமே இத்தகைய திருமணமுறையைக் கையாளுகின்றோம். இவற்றிற்காகப் பாடுபட முன் வந்தவர்கள் நாங்கள் தான்.
திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது. இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ, பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தினாலும் மதப்படிதான் திருமணம் நடத்துகிறார்கள். இந்துக்கள் என்று கூறப்படும் நம்மவர்கள் நடத்தினாலும் மதப்படிதான் நடத்துகின்றோம். இப்படி நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம் மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன. மற்றப்படி நம் தமிழ்நாட்டில் நடைப்பெறும் திருமணச் சடங்குகள் எல்லாம் சாதியைப் பாதுகாக்க சாதிக்கு ஒருமுறையாக ஏற்பட்டுள்ளது. தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று ஆக்கி வைக்கப்பட்டவர்கள் வரவர மேல்சாதிக்காரர்களைப் பார்த்து இப்படிப்பட்ட அர்த்தமற்ற சடங்குகளை எல்லாம் கைக்கொள்ளவும் முற்படுகின்றனர்.
இம்மாதிரியான திருமணங்கள் நடைபெற நாங்கள் முயற்சி எடுத்துக் கொள்ளாமலும் சுயமரியாதையைப் பிரச்சாரங்கள் நடத்தப்படாலும் இருந்து இருக்குமானால் பெண்கள் மிகமிகக் கேவலமான நிலையிலேயே வைக்கப்பட்டு இருப்பார்கள்.பெண்களுடைய இழிநிலை அடிமைத் தன்மை இவற்றைப் போக்க இந்த நாட்டில் எந்த மகானோ, மகாத்மாவோ, அவதார புருஷர்களோ- கவலை எடுத்துக் கொள்ளவே இல்லை. மாறாக இவற்றை நிலைக்க வைக்கவே பாடுபட்டு வந்து இருக்கிறார்கள்.நமது புராணங்கள் எல்லாம் கூட நமது மடமையையும், இழிவையும் பாதுகாக்கவே ஏற்பட்டவையாகும். நம் கடவுளின் அவதாரங்கள் எல்லாம் மக்கள் அறிவு பெற்று விழிப்படையாமல் மடைமையிலும், இழிவிலும், ஆழ்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டனவாகும்.
இந்த நாட்டில் இந்தக் கடவுள் மதம் சாஸ்திரம் இவற்றை எல்லாம் எதிர்த்து ஒர் அளவு வெற்றி பெற்று இருக்கின்றது என்றால் எங்கள் சுயமரியாதைப் பகுத்தறிவு எங்கள் சுயமரியாதைப் பகுத்தறிவு இயக்கம் ஒன்றே தான்.எங்கள் இயக்கம் தோன்றிய பிறகு நாங்கள் சமூதாயத்தில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று கூறினோமோ, எங்கள் செங்கள்பட்டு மாநாடு போன்றவற்றில் என்ன தீர்மானங்கள் எல்லாம் போட்டோமோ, அவற்றில் பகுதிக்கு மேல் இன்று சட்டமாக்கி அமலிலும் இருக்கின்றதைக் காண்கிறோம்.
பலதார மணம் இன்று சட்ட விரோதம் செல்லுபடியாகாது.ஒர் ஆண் ஒரு பெண்ணுடன் தான் குடும்பம் நடத்த வேண்டும் என்று அமலில் இருப்பதைக் காண்கிறோம்.பெண்களுக்கு தகப்பன் சொத்தில் ஆண்களைப் போல பங்கு இன்று இருப்பதைக் காண்கிறோம்.பெண்களும் ஆண்களைப் போல அரசியல், உத்தியோகம், முதலியவற்றில் பங்கு பெற்று வருவதை நாம் இன்று காண்கிறோம்.
(07-06-1962- அன்று மேலவாளாடி திருமணத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. (விடுதலை – 09-06-1962)

கருத்துகள் இல்லை: